திருச்சி:
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், தனது சொந்தமாக உள்ள கே. சாத்தனூரில் 2,400 சதுர அடியில் வீடு கட்டிக்கொடுக்க, திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகினார். கட்டுமான பணிக்காக பல்வேறு தவணைகளாக ரூ.17.40 லட்சம் செலுத்தியிருந்தார்.

ஆனால், உரிய தரத்தில் வீடு கட்டாமலும், பணியை முழுமையாக முடிக்காமலும் காலதாமதம் செய்ததாகக் குற்றம்சாட்டிய அவர், முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர், 2023ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஆணையத் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், நிறுவனத்தின் செயல்முறை தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மனுதாரருக்கு மொத்தமாக ரூ.27.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

அதன்படி,
-
கட்டுமான பணிக்கான செலவாக ரூ.17.40 லட்சம்
-
மன உளைச்சல் மற்றும் முறையற்ற வணிகத்திற்காக ரூ.10 லட்சம்
-
வழக்குச் செலவாக ரூ.10,000
என மொத்தமாக ரூ.27.50 லட்சம் 45 நாட்களுக்குள், வருடம் 9% வட்டியுடன் செலுத்த நீதிமன்றம் கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த தீர்ப்பு, நுகர்வோர் உரிமைகளை வலியுறுத்தும் ஒரு முக்கிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது






